சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை காங்கிரஸ் கட்சி பிரமுகர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பித்தது தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ரவுண்டானா பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஊரடங்கு மீறி சுற்றித்திரிந்த நபரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஆதரவாக பேசுவதற்காக சென்னை கொருக்குப்பேட்டை யைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபா என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் “உன் மீது பெட்டிஷன் போட்டு தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவேன்” என காவல்துறை அதிகாரியை மிரட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற செயல்களை நீங்கள் செய்துவிட்டு சென்று விட்டால் உங்கள் மீது 30 40 பேர் சேர்ந்து கேஸ் போடுவோம் அப்புறம் உங்களால ஒண்ணும் பண்ண முடியாது சார் எனக் கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினர் தவறு செய்தால் அவர்களை தட்டிக் கேட்க வேண்டும் எனவும் கூறியதாக அவர் கூறியுள்ளார். நான் ஏற்கனவே பல பேரை இதுபோன்று மனுக்கள் போட்டு மாற்றியுள்ளேன், கட்சிக்காரர்களை அனுசரிச்சு போங்க சார் என்று காங்கிரஸ் கட்சி பிரமுகர் பேசும் பேச்சி வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Discussion about this post