நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள், இந்நாள் தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

0

கருணை அடிப்படையிலான பணியமர்த்தல் தொடர்பான உத்தரவை பின்பற்றி அமல்படுத்தாததையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பேரில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை தமிழக தலைமைச் செயலாளர்களாக பணியாற்றியவர்கள், ஜூலை 21-ம் தேதி நேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செயல்பாட்டின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள், கருணை அடிப்படையில் அரசு வேலை பெறும் கோரிக்கைகள் தொடர்பாக காலவரையறை நிர்ணயிக்கும்விதமாக ஆய்வு செய்யும் குழுவை அமைக்க வேண்டும். இது குறித்து மாநில அளவிலான பட்டியலை உருவாக்கும் சாத்தியமுள்ளது என்ற கோணத்தில் மூன்று மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த உத்தரவின் அடிப்படையில் எந்தவொரு குழுவும் உருவாக்கப்படவில்லை என்றும், அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் நீதிபதி கண்டித்தார். இதனால், அந்த காலகட்டத்தில் தலைமைச் செயலாளராக இருந்தவர்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஜூன் 20-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், தமிழக அரசுத் தரப்பில் கடந்த ஜூன் 11-ம் தேதி அரசாணை வெளியிட்டு, ஆய்வு குழு அமைக்கப்பட்டதாகவும், மாநில அளவிலான பட்டியல் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். அரசாணையின் நகலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி இதை விமர்சித்து, நீதிமன்றம் தாமாகவே இந்த வழக்கை எடுத்த பின்னரே அரசு நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார். மேலும், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாத உத்தரவை ஜூன் 11-ம் தேதி வரை அமலாக்கவில்லை என்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். எனவே, தண்டனை வழங்குவதற்குமுன் சார்ந்தவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

இதனடிப்படையில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் தற்போதுவரை பணியாற்றிய அனைத்து தலைமைச் செயலாளர்களும், ஜூலை 21-ம் தேதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here