பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இனிமேல் சுகாதார சான்றிதழ் இணையதளம் மூலமாக மட்டுமே வழங்கப்படும் என்று பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

பள்ளி, கல்லூரி, கடைகள், திருமண மண்டபங்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் நலக் கூடங்கள், மகளிர் விடுதி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற இடங்களில் சுகாதாரம் போதிய அளவில் பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசு சுகாதார சான்றிதழ் வழங்குகிறது. இந்நடவடிக்கையை இப்போது மேலும் எளிமைப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, இப்போது https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவே சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக செலுத்தப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களும், சுயஉறுதிமொழியும் இணையதளம் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் கணினி மூலமாக சுகாதார சான்றிதழ் உருவாக்கப்படும். அதை பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்து, உரிய இடங்களில் வைக்க வேண்டும்.

சான்றிதழில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இருந்தால், ஆய்வின்போது அது தெரியவந்தால் சான்றிதழ் ரத்து செய்யப்படும். எதிர்காலத்தில் சுகாதார சான்றிதழ் நேரடியாக வழங்கும் நடைமுறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box