‘டவ்டே’ புயல் காரணமாக கேரளா அதை ஒட்டிய ஏழு தமிழக மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யலாம். சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதே சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம், தேவாலாவில், அதிகபட்சமாக, 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியாறு, கோவை மாவட்டம், சோலையார் பகுதிகளில், தலா, 10 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடல், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில், வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து கன மழை பெய்கிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளில் இருந்து, சோலையாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மே 31ல் பருவ மழைஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதியை ஒட்டி, தென் மேற்கு பருவ மழை துவங்கும்.
தற்போது, அரபிக் கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில், பருவ மழை துவக்கத்துக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த பின்னணியில் வரும் 31ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.
Discussion about this post