கொடைக்கானலில் மண் அள்ளும் மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரங்களுக்கு தடை
மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதால், கொடைக்கானலில் ஜூலை 1-ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கோட்டாட்சியர் திருநாவுக்கரசு பிறப்பித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மலைப்பகுதியில், மண் அகற்றும் இயந்திரங்கள் (ஜேசிபி), பாறைகள் வெடிக்க வைக்கும் செயல், ஆழ்துளை கிணறு அமைப்பது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சட்ட விரோதமாக சிலர் இவ்வகை வாகனங்களை பயன்படுத்தி கட்டுமானப் பொருட்கள் அகற்றுவது மற்றும் விவசாய நிலங்களை சமப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, அனுமதியின்றி காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மை ஆணையம் மழைக்காலத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரித்ததையடுத்து, இந்த தடையை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூன் 24-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாட்சியர், “ஜூன் 30-ம் தேதிக்குள் அனைத்து அனுமதியில்லா இயந்திரங்களை மலைப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும். ஜூலை 1-ம் தேதி முதல் தடையை மீறி இயந்திரங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையில் அபராதம், மீண்டும் பயன்படுத்தினால் வாகனம் பறிமுதல் மற்றும் காவல்துறையின் சட்ட நடவடிக்கையும் இருக்கும்,” என எச்சரித்தார்.
மேலும், அரசு ஊழியர்கள் தடை செய்யப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்த உதவினால், அவர்கள்மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.