தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை, இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த ஒத்திகை, தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில், காவல்துறையின் ஏற்பாட்டில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு படை, ஆயுதப்படை, சிறப்புக் காவல் படை, கடலோர காவல் பிரிவு, குற்றப் பிரிவு போலீசார் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் பிரிவினரும் கலந்துகொண்டனர்.
இந்த ஒத்திகையின் போது, மாநிலத்தின் துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோர கோயில்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சோதனைக்குப் பின் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீவிரவாதிகளைப் போல மாறுவேடம் அணிந்து கடல் வழியாக ஊடுருவும் போலீசாரை, பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அடையாளம் கண்டு பிடித்து கைது செய்தனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மொத்தமாக 8,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில், தலைமைச் செயலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் போன்ற முக்கிய இடங்களில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.