கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேட்டு கொண்டதற்கு இணங்க மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து தமிழகத்திற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவை சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
அவர் தனது கடிதத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் ஆக்சிஜன் அளவை அதிகரித்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழகத்தில் இயங்கி வரும் செய்ல் (SAIL) நிறுவனத்திடமிருந்து ஆக்சிஜன் பெற்றுத் தருமாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் எக்குத்துறை தமிழகத்திற்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அளித்துள்ளது. அதன் ஒரு பகுதி நேற்று கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், “திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக” தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து பம்பரமாக சுழன்று வேலை செய்துவரும் வானதி சீனிவாசனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோல் பாரதிய ஜனதாவை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவான எம்.ஆர்.காந்தியும் மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து நேரடியாக ஆக்சிஜன் பெற்று தனது தொகுதிக்கு கொடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post