சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘கூமாப்பட்டி’ – உண்மையில் என்ன நிலை?
வளர்ந்த டிரெண்டும், உண்டான விளைவுகளும்:
dark_night_tn84 என்ற இன்ஸ்டா ஐடியை வைத்துள்ள இளைஞர், “கூமாப்பட்டி ஊருக்கு வாருங்க” என்று தொடர்ந்து பல வீடியோக்களை பகிர்ந்துவருகிறார். வீடியோவில், மன அழுத்தத்திற்கு தீர்வாகவும், இயற்கையை அனுபவிக்க கூடிய இடமாகவும் கூமாப்பட்டியை விளக்கியிருந்தார். “கூமாப்பட்டி ஒரு தனித் தீவு… இங்கு மூலிகை தண்ணீர் கூட கிடைக்கும்!” என அவர் கூறியது பலரை கவர்ந்தது.
அரசு எச்சரிக்கை:
இந்நிலையில், பொதுப் பணித்துறை அதிகாரிகள், “கூமாப்பட்டி ஒரு சிறிய கிராமம், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. வீடியோவில் காட்டிய பகுதிகள் வனப்பகுதியில் உள்ளதால், அனுமதியில்லாமல் செல்ல முடியாது,” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூமாப்பட்டி கிராமத்தில், அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அருகில் உள்ள ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும் அருவிகள் இருந்தாலும், செல்லும் பாதைகள் மோசமடைந்துள்ளன. போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அணை மற்றும் பூங்காவின் நிலைமை:
பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் அதன் அருகிலுள்ள பூங்கா, கொரோனா காலத்தில் மூடப்பட்டதிலிருந்து மீண்டும் திறக்கப்படவில்லை. இதனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், ரூ.10 கோடி நிதி அறிவிக்கப்பட்ட போதிலும், புதுப்பிப்பு பணிகள் தொடங்கப்படவில்லை.
முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நேரம்:
இளைஞரின் வீடியோ மூலம் வைரலான கூமாப்பட்டி தற்போது இணைய பயனாளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பினும், இவ்வூரின் நிலைமை பற்றிய உண்மைகளை அறிந்து செயல் பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். உண்மையான சுற்றுலா மையங்களை பயணமாக தேர்வு செய்யும்போது, அங்கு உள்ள வசதிகளை பரிசீலிக்க வேண்டியது அவசியம்.