திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸின் வெற்றிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சி. ராபர்ட் புரூஸ், 1,65,620 வாக்குகள் என்ற பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு எதிராக பாஜகவின் நயினார் நாகேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் முறைகேடு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், “ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்துகளையும், வழக்குகளையும் வெளியிடாமல் மறைத்துள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 19ஆம் தேதி நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, தன்னை சார்ந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரனின் முன் இன்று (ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நாகேந்திரன் ஆஜராகி, ராபர்ட் புரூஸ் தரப்பின் வழக்கறிஞரால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் நீண்ட இந்த விசாரணையில், ராபர்ட் புரூஸின் சொத்து விவரங்கள் மற்றும் அவற்றை எப்படி பெற்றார் என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறுக்கு விசாரணை இன்னும் முடிக்கப்படாததால், நீதிபதி விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதற்கேற்ப, அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளார்.

Facebook Comments Box