அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமுள்ள உணவு வழங்கப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கெட்டுப்போன முட்டைகள் மற்றும் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மாதிரிப் பள்ளியில் இவ்வாறான உணவுகள் வழங்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உணவு தரமற்றதுடன், சுகாதாரக்கேடான முறையில் தயாரிக்கப்படுவதாகவும், அதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்பே ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை வசதி இல்லாமை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படும் அரசு பள்ளிகளில், உணவுப் பிரச்சனையும் தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இது, அரசுப் பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

அதனால், மாணவர்களுக்கு தரமான உணவுடன், பள்ளிகளின் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box