பூவை ஜெகன்மூர்த்தி கைது நடக்குமா? நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, அவரை தேடிவந்தபோது இல்லாததால், தனுஷின் சகோதரனை கடத்திச் சென்று, பின்னர் விடுவித்தனர்.
தனுஷின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் பேரில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விஜயஸ்ரீவின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, தன்னை கைது செய்யலாம் என அஞ்சிய ஜெகன்மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி. வேல்முருகன், ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான ஜெகன்மூர்த்திக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து, பின்னர் விசாரணைக்குப் பிறகு விடுவித்தனர். இதைத் தொடர்ந்து அவரை அரசு பணியிடை நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என்றும், சிபிசிஐடிக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இன்றைய விசாரணை:
ஜூன் 27 அன்று நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. காவல்துறை சார்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, “பூவை ஜெகன்மூர்த்தி இந்த சிறுவன் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. முன்ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சிகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஏடிஜிபி உடனான சந்திப்பு புகைப்பட ஆதாரத்துடன் உள்ளது. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்றார்.
ஜெகன்மூர்த்தியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், “சம்பவ நாள் அவர் திருமண நிகழ்வுகளில் இருந்தார். மகேஸ்வரியின் வாக்குமூலத்தின்பேரில் அவரை வழக்கில் இணைத்துள்ளனர். சம்பவத்துடன் அவர் எந்த தொடர்பும் இல்லை” என வாதிட்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, இன்று வழக்கில் உத்தரவு வழங்க உள்ளதாக அறிவித்தார். இதனால், பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்படுவாரா என்பது குறித்த பரபரப்பு நிலவுகிறது.