மதச் சுதந்திர உரிமை மீறல் குறித்து தமிழக முதல்வருக்கு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் கடிதம்
ஸ்ரீநகர் சேர்ந்த மருத்துவ மாணவனுக்கு, கோவை உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பட்டமேற்படிப்பு அனுமதி வழங்கப்பட்ட போதும், மதச் சுதந்திரத்தை மீறும் விதமான நிபந்தனையை நிறைவேற்றாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரி, காஷ்மீர் மாணவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
“நீட் எஸ்எஸ் இரண்டாவது கட்ட கவுன்சிலிங்கின் போது, டாக்டர் சுபைர் அகமது என்பவருக்கு கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (KMCH) நெப்ராலஜி துறையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவரது தாடியை அகற்றுமாறு கேட்டு, அந்தக் கோரிக்கையை ஏற்காததால் அவருக்கான சேர்க்கை நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்.”
மருத்துவமனைக்கு சென்று சேர்க்கைக்கான அனைத்துப் படிகளையும் நிறைவு செய்த பின்னர், தாடி குறித்து உறுதிமொழி கொடுக்கும்படி அவரிடம் கூறப்பட்டதாம். இது அவருடைய மத நம்பிக்கைக்கு முரணாக இருப்பதால், அவர் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். அவர் முகக்கவசம் மூலம் தாடியை மறைக்கத் தயாராக இருப்பதாகவும், சுகாதார விதிமுறைகள் மற்றும் ஆடையமைப்புகளுக்கு இணங்க இருப்பதாகவும் உறுதியளித்தபோதும், மருத்துவமனை நிர்வாகம் இடமளிக்க மறுத்துள்ளது.
அத்துடன், தாடி முறையைக் குறித்து முன்பே அறிவித்திருந்தால், டாக்டர் சுபைர் அந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்றும், இடம் பெற்றும் சேர்க்கையிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவில் உள்ள மத சுதந்திர உரிமையை நேரடியாகக் குழப்புவதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேர்க்கைக்கு செலுத்திய ரூ.2 லட்சம் பாதுகாப்புத் தொகையையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அவரால் கோரப்பட்டுள்ளது.
தோற்ற அடிப்படையில் விதிக்கப்படும் விதிமுறைகள் தவிர்க்க வேண்டியவை மட்டுமல்லாமல், தவறான பாரபட்சமும் காட்டுகின்றன. சேர்க்கைக்கு பின் விதிகளை கூறுவது நியாயமற்றது. இது தமிழ்நாட்டின் மதச் சகிப்புத் தன்மை, பன்மை மற்றும் நீதிக்கு எதிரானது எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா முழுவதிலிருந்தும் மாணவர்கள் தமிழ்நாட்டை கல்விக்காக நாடி வருவது பொதுவானது. இந்தச் சம்பவம் அந்த நம்பிக்கையை குலைக்கக்கூடியது. சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் மத சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டும். அரசு அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நீதிக்கும், சமத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு மாணவரின் உரிமையை உறுதி செய்ய வேண்டும்” எனக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.