ஒருங்கிணைந்த சேவைகளுக்கான ஒற்றை உள்நுழைவு தளம்: 9 அரசு வலைதளங்கள் இணைப்பு – அமைச்சர் தகவல்
பொதுமக்களுக்கு எளிமையான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்கும் நோக்கில், ஒற்றை உள்நுழைவு தளம் (Single Sign-On) உருவாக்கப்பட்டு, தற்போது அதன்மூலம் 9 அரசு துறைகளின் வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
மாநில அரசுத் துறைகளின் மென்பொருள் பயன்பாட்டை ஒரே வடிவமாகக் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைந்த அடையாள அங்கீகாரம் வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மூலம் “தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம்” கடந்த 2023–24 நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த தளம் பயனாளர்களுக்கு பல்வேறு வலைதளங்களில் தனித்தனியாக உள்நுழைவதோ பன்முறை சான்றிதழ்களை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை நீக்கி, ஒரே உள்நுழைவு மூலம் பல தளங்களில் சேவைகள் பெறும் வசதியை ஏற்படுத்துகிறது. இது பாதுகாப்பும், ஒருங்கிணைப்பும் கொண்ட ஒரு மைய சேவை மாதிரியாகும்.
இத்தளத்தின் மூலம், இரு முக்கிய அம்சங்கள் – அரசு துறைகள் இடையிலான சேவைகள், அரசு மற்றும் பொதுமக்கள் இடையிலான சேவைகள் – ஆகியவற்றில் தொடர்ச்சியான மேம்பாடு நடைப்பெற்று வருகிறது.
தற்போது, மொத்தம் 9 முக்கியமான அரசுத் துறை இணையதளங்கள் இந்த ஒற்றை உள்நுழைவு தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அவை:
- மின் அலுவலகம்
- நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் CCMMS தளம்
- TANFINET
- நேரடி பணப்பரிமாற்ற இணையதளம்
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
- மாநில உதவித்தொகை இணையதளம்
- பயிர் கணக்கெடுப்பு இணையதளம்
- GrINS (பொதுமக்கள் சேவைகள் தளம்)
- தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு
இந்த இணையதளங்கள் தற்போது ஒற்றை உள்நுழைவு தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் மூலம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.