பேருந்துகளில் சாகசமாக பயணிக்கும் மாணவர்களுக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்
பொதுப் பேருந்துகளில் படிக்கட்டில் நின்று அல்லது தொங்கியபடியே பயணிக்கின்ற மாணவர்களின் செயல் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இலவசப் பேருந்துப் பயணச் சலுகையைப் பயன்படுத்துகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2024–25 கல்வியாண்டில் 23.5 இலட்சம் பள்ளி மாணவர்களும், சுமார் 2 இலட்சம் கல்லூரி மாணவர்களும் இந்த சலுகையைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் கூட்டம் நிறைந்த பேருந்துகளில் புத்தகப்பை மற்றும் உணவுப் பைகளுடன் பயணிக்கின்றனர். இந்தக் காரணத்தால், சிலர் படிக்கட்டில் தொங்கியபடியே பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது விபத்துக்களுக்குக் காரணமாகிறது என்றும், மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தனி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி.மரிய கிளாட் ஆகியோர் கூறியது:
“பிள்ளைகளை நேர்மையானவர்களாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும். ஆனால் இப்போது பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் புகை, மது, கஞ்சா போன்ற பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். சில மாணவிகள் பாதுகாப்பு தேவைப்படும் நிலைமையில் உள்ளனர்.
பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பது தொடர்பாக பல புகார்கள் எழுகின்றன. ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் எச்சரிக்கையை மாணவர்கள் புறக்கணித்து, சாகசமாகவே கருதி அந்தவகையில் பயணிக்கிறார்கள்.
இதுபோன்ற படிக்கட்டுப் பயணம் மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். எனவே, போலீசார் இத்தகைய பயணங்களை தடுக்கவும், குற்றம் செய்யும் மாணவர்களிடம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.”