மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்வு – டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 73,452 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ளது. இதனையடுத்து, டெல்டா பாசன பகுதிக்கு திறக்கப்படும் நீரளவு 22,500 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாராக வழக்கப்படி ஜூன் 12 அன்று பாசனத்திற்கான நீர் திறப்பை தமிழக முதல்வர் தொடங்கினார். தொடக்கத்தில் திறக்கப்பட்ட 22,500 கன அடி நீரளவு, தற்போது விவசாய தேவையால் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்து அதிகரிப்புக்கு காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் ஏற்பட்ட கனமழை, மற்றும் அங்குள்ள அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் ஆவதாகும். குறிப்பாக, கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி மேட்டூர் அணைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 116.89 அடி, மற்றும் நீர் இருப்பு 88.59 டிஎம்சி என்ற நிலையை எட்டியுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடி, மேல்மட்ட 8 கண் மதகு வழியாக 3,500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மட்டம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இருப்பதை கருத்தில் கொண்டு, தண்ணீர் திறப்பதற்கு முன் நீர்வளத்துறை ஊழியர்கள் அவர்களை வெளியேற்றினர். பின்னர், அந்த வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக நீர்வளத்துறை மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுமுறை நாளில் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், திறக்கப்படும் தண்ணீரை காணும் மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.