மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் சாத்தியம்: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 80,984 கனஅடி அளவுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதனால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலை உருவாகியுள்ளது. இதனால், உபரிநீர் திறக்கப்பட வாய்ப்பு அதிகமுள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பி விட்டதால், அந்த நீர் காவிரிக்குள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் விளைவாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில், அந்த அணைக்கு விநாடிக்கு வந்த நீர்வரத்து 60,740 கனஅடியில் இருந்து 73,452 ஆகவும், பின்னர் 80,984 கனஅடியாகவும் அதிகரித்தது. பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் அளவும் 22,500 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

திறக்கும் நீரைவிட வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. நேற்று அணையின் நீர்மட்டம் 117.93 அடியாகவும், நீர் சேமிப்பு 90.20 டி.எம்.சி ஆகவும் பதிவானது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 2.07 அடி மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு, மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் திரு. செல்வராஜ் எழுதிய கடிதத்தில், அணை விரைவில் நிரம்பும் காரணத்தால், காவிரியில் 50,000 முதல் 75,000 கனஅடி வரை உபரிநீர் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், காவிரி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்புக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், கடந்த இரவில் 88,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 78,000 கனஅடியாகவும், மாலை 3 மணிக்கு 70,000 கனஅடியாகவும் குறைந்துள்ளது.

Facebook Comments Box