பாமக எம்.எல்.ஏ. இரா. அருள் கட்சியில் இருந்து நீக்கம் – அன்புமணி அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா. அருள், கட்சியின் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும், தொடர்ந்து கட்சியின் மதிப்பை குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில், அவர் செய்தித் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் கட்சித் தலைமையை விமர்சித்துள்ளார். இந்த சூழ்நிலையை பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, அவரது செயல்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு மாறானவை என கண்டறிந்தது. இதையடுத்து, இரா. அருள் பன்னிரண்டு மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், அவர் அதைப் பின்பற்றவில்லை.
இதனையடுத்து, பாமக அமைப்புச் சட்ட விதி 30ன் கீழ், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், இரா. அருள் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மற்றும் உறுப்பினரான நிலைபாடிலிருந்தும் நீக்கப்படுகிறார். மேலும், பாமக உறுப்பினர்கள் அவருடன் எந்தவிதமான தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.