“போலீஸ் விசாரணை மரணங்களில் உயர் அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள மடப்புரத்தில், போலீஸ் விசாரணை நடைபெறும் போது உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: “திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே, அஜித்குமார் குடும்பத்தினரின் முக்கிய குற்றச்சாட்டு ஆகும். விசாரணை நேரத்தில் நிகழ்ந்த மரணம் என்பது காவல்துறையின் கடும் தவறான நடவடிக்கையைக் குறிக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு வழங்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்று.
அத்துடன், போலீஸ் விசாரணை மற்றும் காவல் நிலைய மரணங்களுக்கு காரணமான உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அஜித்குமாரின் மரணத்திற்கான விசாரணை விரைவாக நடைபெற்று, மூன்று மாதங்களில் முடிக்கப்பட வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், அஜித்குமார் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க எங்கள் கட்சி முன்வந்துள்ளது,” என அவர் கூறினார்.