தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜன், தனது கட்சியினருள் ஒருவருக்காக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகாருக்கு போலீஸார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது கட்சியினருடன் சேர்ந்து புகார் அளித்ததாக நிரூபிக்க, 14.01.2025 அன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பெற வேண்டுமெனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை ஏற்று, அன்றைய சிசிடிவி காட்சிகள் அவரிடம் வழங்கப்பட்டன. அந்த காட்சிகளில், ஒருவர் போலீஸாரால் இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்படுவதைக் காணலாம். இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்கப்பட்டவர் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ரமேஷ் என தெரியவந்துள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சம்பவத்தன்று ரமேஷ் மதுபோதையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவும், அவரை கட்டுப்படுத்த முற்பட்டபோது போலீஸாருடன் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, கட்டுப்படுத்த அதிகப்படியான பலம் பயன்படுத்தப்பட்டது. இதனைக் காணும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஆய்வாளர் அபுதல்ஹா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவசுப்பு, ஏட்டு பாண்டி, மற்றும் முதல்நிலை போலீசார் மாரிச்சாமி மற்றும் வாலிராஜன் ஆகியோர் தேனி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி ஜெரால்டு அலெக்சாண்டரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.