“சேலம் மேற்கு தொகுதியில் பாமகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார் ராமதாஸ். அதில், “நகை திருட்டு வழக்கில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அஜித் மீது புகார் அளித்த நிகிதா மீதான மோசடி குற்றச்சாட்டுகள் தற்போது தெரியவந்துள்ளன. அஜித்தை தாக்கிய காவலர்களை கைது செய்துள்ளனர். ஆனால் அவர்களை தூண்டியவர்கள் யார்? நிகிதாவின் ஒரே ஒரு போன் அழைப்பால் இத்தனை தாக்கம் ஏற்படுவது எப்படி? இதற்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராகும் நடவடிக்கைகள் அவசியம்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, பாமகவில் இருந்து அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை என்றும், நிர்வாகிகள் நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு மட்டுமே இருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், “அருள் பாமகாவின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான கொறடாவாக செயல்படுகிறார். ஜி.கே.மணி பாமக சட்டமன்றக்குழு தலைவராக உள்ளார். சபாநாயகருக்கு கடிதம் அனுப்ப வேண்டுமென்றால், அதற்கும் என் அனுமதி அவசியம். எனவே, அருளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது” என்றார்.

மேலும், அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் இணை பொதுச் செயலாளர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும், அவர் அந்த பொறுப்புகளை சிறப்பாக வகித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

“நான் கட்சியை தானாகவே முன்னெடுத்து செல்கிறேன். தற்போது சிலர் எனது மனதிற்கு வலி அளிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் கட்சியின் நலனுக்காக அனைத்தையும் புறக்கணித்து செயல் பட்டு வருகிறேன். பாமக திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற செய்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே. கட்சி சார்பில் கூட்டங்கள் நடைபெற்று, செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவின் முடிவின் பேரில் தான் கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, “ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடைபெறும். ஜூலை 10ஆம் தேதி மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட செல்கிறேன். இது ஒரு அனைத்துக்கட்சி மகளிர் மாநாடு ஆகும். அதனால் அனைத்து கட்சிகளை சேர்ந்த மகளிரும் இதில் கலந்து கொள்ளலாம். அன்புமணி தொடர்பான கேள்விகளை எனது கவனத்திற்கு வராதவாறு இருக்க வேண்டுகிறேன்” என கூறினார்.

Facebook Comments Box