மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
மடப்புரம் கோயிலில் காவலராக பணியாற்றிய அஜித்குமாரை போலீஸார் தாக்கி உயிரிழக்க செய்த சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தன்னிச்சையாக வழக்கை எடுத்துக்கொண்டு, விசாரணை நடத்துமாறு புலனாய்வு பிரிவு ஐ.ஜி.-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அஜித்குமாரின் மரணம் தொடர்பான செய்தியின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு, ஆறு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.
சம்பவ வரலாறு:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27), அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஒப்பந்த அடிப்படையிலான தனியார் காவலராக பணியாற்றி வந்தார். ஜூன் 27-ம் தேதி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயுடன் அந்த கோயிலுக்கு வந்திருந்தபோது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகையும் ₹2,500 பணமும் காணவில்லை என புகார் அளித்தார்.
இதையடுத்து, திருப்புவனம் போலீஸார் அஜித்குமாரை உட்பட ஐந்து பேரை விசாரித்தனர். பிறரை விடுவித்துவிட்டு, அஜித்குமாரை மட்டும் மானாமதுரை தனிப்படை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஜூன் 28-ம் தேதி அவர் போலீஸ் மோதலில் உயிரிழந்ததாக தெரியவந்தது.
இதன் பின்னர், சம்பந்தப்பட்ட தனிப்படை போலீசில் பணியாற்றும் 6 பேர் – பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் மற்றும் ராமச்சந்திரன் – பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜூன் 30-ம் தேதி, நீதிபதி வெங்கடேஷ்பிரசாத் விசாரணை நடத்தினார். பின்னர், டிஐஜி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டார்.
மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில், அஜித்குமாரின் உடலில் 40-க்கும் மேற்பட்ட காயங்களும், ரத்தக் கசியும் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, ராமச்சந்திரனைத் தவிர மற்ற ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை எதிர்த்து, கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
மேலும், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், “அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது” என கடுமையாக விமர்சனம் செய்தனர். பின்னர், மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக விசாரணை தொடங்க உத்தரவிட்டார். வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவர் பெற்றுக்கொண்டார் மற்றும் பல தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்; எஸ்பி ஆஷிஷ் ராவ் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற அவர் மாற்றப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிச் சமாதானம் தெரிவித்ததோடு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.