7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சட்டக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள பொருளாதார சிக்கலிலுள்ள மாணவர்களுக்காக புதிய விடுதியை விரைந்து கட்டி முடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பொதுப்பணித்துறையின் கட்டடங்களை சீரமைத்து, மாணவர்கள் தங்கும் வசதியையும், அவர்களுக்கு இலவச உணவு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை 3ஆம் தேதி சட்டக் கல்லூரி மாணவர்கள் என்னை நேரில் சந்தித்து, தாங்கள் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை, கழிவறை பராமரிப்பு மோசமாக இருப்பது, மற்றும் ஒதுக்கப்பட்ட இடமின்றி நிறைவற்ற வசதிகளுடன் தங்கி வருகிறோம் என தெரிவித்தனர். இந்தக் குறைகளைத் தூக்கிக்காட்டி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில், அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை நிறுத்தினர்.

ஆனால், அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக இந்த ஆண்டிற்கான சட்டத் துறை மானிய கோரிக்கையில் 21.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விடுதி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என மாணவர்கள் எனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சில மாணவர்கள் அரசுக்கு சொந்தமான பொதுப் பணித் துறையின் கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த கட்டடங்களில் பராமரிப்பு இல்லாததால் அனைத்துப் பிற மாணவர்களும் அங்கு தங்க அனுமதிக்கப்படவில்லை. பலர் தனியார் விடுதிகளில் அதிக வாடகை கொடுத்து தங்கி வருகிறார்கள். இது அவர்களுக்கு நிதிச் சுமையாக உள்ளது.

நாம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியதைத் தொடர்ந்து, தொழிற்கல்விகளிலும் அந்த ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது அந்த இடஒதுக்கீட்டில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை என்பது வேதனையான விஷயம்.

எனவே, அரசு அறிவித்தபடி புதிய விடுதியை விரைவில் கட்டி முடிக்க வேண்டும். அதுவரை அரசு கட்டடங்களை சீரமைத்து அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் இடத்தையும், இலவச உணவையும் வழங்க வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box