இளம்பெண் ரிதன்யாவின் மரணத்திற்கு நீதிகேட்டு அவிநாசி மக்கள் அஞ்சலி செலுத்தினர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில், கணவரும் அவரது குடும்பத்தினரும் மேற்கொண்ட மன அழுத்தத்தையும், துன்புறுத்தலையும் தாங்க முடியாமல் உயிரிழந்தார். அவரால் அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் ஆடியோ, அவரது தந்தை மூலமாக வெளிவந்ததுடன், சமூகத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த பரிதாபகரமான நிகழ்வுக்கு எதிர்வினையாக, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி மற்றும் தாய் சித்ராதேவி ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நீதி கோரி, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் தன்னார்வமாக கலந்துகொண்டு, ரிதன்யாவின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் கூறியதாவது: “பெண்கள் மீது நிகழும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றன. பெண்கள் வாழ்க்கையில் மன உறுதியுடன் இருக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. குழந்தைகளுக்கு குடும்ப சூழலில் பாதுகாப்பான மற்றும் ஆதரவான நிலையை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும். ரிதன்யாவின் மரணம், பல பெற்றோருக்கும் விழிப்புணர்வையும் வாழ்க்கை பாடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் எந்த நிலையிலும் தவறான முடிவுகளை எடுக்காமல், நிமிர்ந்துப் போராட வேண்டும்” என்றனர்.

இந்த நிகழ்வில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்று, தங்களின் ஆதங்கத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்தினர்.

ஜாமீன் மனு நிராகரிப்பு

இதேவேளை, சித்ராதேவி கைது செய்யப்படுவதற்கு முன்னர், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோர், திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ரிதன்யாவின் பெற்றோர் இதற்கு எதிராக இடையீட்டு மனுவை தாக்கல் செய்து, பிணை வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, இன்று அந்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்து, குற்றவாளிகள் சிறையில் தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

Facebook Comments Box