தமிழக சுகாதாரத் துறையில் வெற்றிடமாக உள்ள செவிலியர், மருந்தாளர் மற்றும் ஆய்வக நுட்ப நிபுணர்கள் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கத்தின் வாயிலாக நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய நலவாழ்வுக் குழுமம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக, தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ், மாநிலத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி டீன்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை (DPH), மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (DMS), மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிர்வாக பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் அவசியம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 21 மற்றும் ஜூன் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற துறையசார் ஆலோசனை கூட்டங்களில், இப்பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், அவை சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வின் அடிப்படையில், மாவட்ட சுகாதார சங்கங்களை பயன்படுத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முக்கிய முடிவாக உருவெடுத்துள்ளது.

மேலும், இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும், நியமிக்கப்பட்டவர்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தர நியமனம் அல்ல என்பதையும், இந்த தகவலை நியமிக்கப்படுபவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் 2,500 செவிலியர்கள், 1,500 மருந்தாளுநர்கள் மற்றும் ஆய்வக நுட்ப நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுவரை இந்த வகை பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் நிரப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box