நாளை நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வேண்டுகோள்

தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகள் மற்றும் தேவைகளை வலியுறுத்தும் வகையில், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாளை (ஜூலை 9) நாடு முழுவதும் நடத்த உள்ள பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

அப்போது அவர் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 15 முதல் 18-ஆம் தேதி வரையிலான நாட்களில் சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

“பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் மாற்றக்கூடாது” என்ற கோரிக்கையை முக்கியமாக முன்வைத்து, தொழிற்சங்கங்கள் நடத்த உள்ள போராட்டம் உண்மையில் மக்கள் நலனுக்காகவே நடைபெறுகிறது. எனவே இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஒற்றுமையாக ஆதரவு தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதிமுக-பாஜக இடையிலான உறவைக் குறித்தும் அவர் விமர்சித்தார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை அதிமுகவின் பல தொண்டர்கள் ஏற்காமல் இருப்பதால், அவர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பாஜகவிடமிருந்தும் தன்னை பாதுகாக்கவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் அவர் தற்போது பாஜக எனும் “எலிப்பொறியில்” சிக்கிக் கொண்டு, வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார் என சாட்டையடி கொடுத்தார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என சிலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் அத்தகைய குழப்பமோ, சலசலப்போ எதுவும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி உறுதியானது. எந்த தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடும் என்பது குறித்து பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும் என்று முத்தரசன் விளக்கமாகத் தெரிவித்தார்.

Facebook Comments Box