முந்தைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில், வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் சமூக அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்திருந்தன. அந்த வழக்குகளின் விசாரணை நடைபெறும் போதே, இந்த புதிய வக்பு சட்டத்தில், முஸ்லிம் அல்லாத நபர்களையும் குழுக்களில் சேர்த்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நீதிபதிகள் சந்தேகங்களை எழுப்பினர்.

இதற்குப் பின்னர், மத்திய அரசு தானாகவே முன்வந்து, வழக்கு விசாரணை முடிவடையும் வரை, அந்த சர்ச்சைக்குரிய பிரிவுகளை நடைமுறைக்கு கொண்டுவர மாட்டோம் என உத்தரவாதம் அளித்தது. இதன் விளைவாக, சில குறிப்பிட்ட அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், வக்பு திருத்த சட்டத்தின் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டு வருகின்றன.

இந்தச் சட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு தேசிய அளவிலான ஒரு இணையதளத்தைக் கடந்த காலத்திலேயே உருவாக்கி வைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை, புதிய வக்பு சட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மேலாண்மை விதிமுறைகள் வெளியிடப்பட்டன. 17 பக்கங்களில் உருவாக்கப்பட்ட இந்த விதிமுறைகள், “ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளிப்பு, திறன் மற்றும் மேம்பாட்டு விதிகள் 2025” என்ற தலைப்பில் அரசிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களுக்குள் உள்ள வக்பு சொத்துகளை அந்த தேசிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் உள்ள தரவுகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறையின் ஒரு இணைச் செயலாளர் நேரடியாக கண்காணிப்பார்.

சொத்து பதிவு செய்யப்பட்டவுடன், அந்த வக்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துக்கு ஒரு தனித்துவமான அடையாள எண் (Unique ID) வழங்கப்படும். இதற்காக, ஒவ்வொரு மாநிலமும் இணைச் செயலாளர் தரத்தில் உள்ள ஒருவரை நோடல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தின் 108-B பிரிவின் கீழ், விதவை பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு ஜீவனாம்சம் வழங்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பிரிவு, வக்பு (திருத்தம்) சட்டம் 2025ன் கீழ் சேர்க்கப்பட்டதாகும். இது ஏப்ரல் 8, 2025 முதல் சட்டபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த விதிகளின்படி, விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் அனாதைகள் உள்ளிட்டோர், ஜீவனாம்சம் பெறுவதற்காக வக்பு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வக்பு சொத்துகளை பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ள முத்தவல்லிகள் தங்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அந்த இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதும் அவசியமாக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box