விரைவு ரயில்களில் டைனமிக் கட்டண முறையை அகற்ற வேண்டும் எனக்கோரல்: ரயில்வே அமைச்சருக்கு நுகர்வோர் அமைப்பினர் மனு

விரைவு ரயில்களில் டைனமிக் கட்டண முறையை அகற்ற வேண்டும் எனக்கோரல்: ரயில்வே அமைச்சருக்கு நுகர்வோர் அமைப்பினர் மனு

ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி போன்ற பிரீமியம் வகை விரைவு ரயில்களில் நடைமுறையில் உள்ள ‘டைனமிக் ஃபேரா’ எனப்படும் மாறும் கட்டண முறையை ரத்து செய்யக் கோரியுள்ளனர் அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி.) நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் சமீபத்தில் புதுடெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், டைனமிக் கட்டண முறையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

அதில், ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி மற்றும் பிற முக்கிய விரைவு ரயில்களில் பயணிக்க பயணிகளிடம் கட்டணங்கள் படிப்படியாக அதிகரிக்கும் வகையில் வசூலிக்கப்படும் நடைமுறை (டைனமிக் கட்டண முறை) மிகவும் பாரமாக இருப்பதால், அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரயில்களில் முன்பதிவின் இறுதி கட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கான டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான ரத்து கட்டணத்தை வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கழிப்பறை அமைப்புகளையும் மாற்ற வேண்டும் என அவர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஒர் மேற்கத்திய கழிப்பறை மற்றும் மூன்று இந்தியக் கழிப்பறைகள் என்ற அமைப்பை மாற்றி, இரண்டு மேற்கத்திய மற்றும் இரண்டு இந்தியக் கழிப்பறைகள் ஆகிய அமைப்பை அனைத்து ரயில் பெட்டிகளிலும் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

மேலும், மெமு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மதுரையில் தனியாக மெமு ரயில் பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும். அதேசமயம், திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு புதிய முனையத்தின் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்றும், சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே பகல் நேரத்தில் “அம்ருத் பாரத்” ரயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், நாட்டளவில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3 முக்கிய அம்சங்களும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய 6 தனித்துவமான கோரிக்கைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

மனுவை பெற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியிடப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Facebook Comments Box