மதுரை மாநகராட்சி சொத்து வரி மோசடி விவகாரம்: ஐந்து மண்டலத் தலைவர்களின் ராஜினாமா ஒப்புதல் – மேயர் இந்திராணி அறிவிப்பு
மதுரை மாநகராட்சி சொத்து வரி மோசடி தொடர்பான வழக்கில், மாநகராட்சி மண்டலங்களைச் சேர்ந்த ஐந்து திமுக மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், அவை ஏற்கப்படும் என்றும் மேயர் இந்திராணி இன்று அறிவித்தார்.
இந்த மோசடி விவகாரத்தில், சேவை நிறைவு பெற்ற முன்னாள் உதவி ஆணையர் ரங்கராஜன், தற்போதைய உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மற்றும் கணினி ஒப்பந்ததாரர்கள் ஆறு பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது, மண்டலங்கள் 2, 3, 4 மற்றும் 5-இல் உள்ள சுமார் 150 கட்டிடங்களுக்கு சொத்து வரி குறைவாக வசூலிக்கப்பட்டு, தவறான முறையில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மண்டலங்களின் திமுக தலைவர்கள் — வாசுகி (கிழக்கு), சரவண புவனேஷ்வரி (வடக்கு), பாண்டி செல்வி (மத்தி), முகேஷ் சர்மா (தெற்கு), மற்றும் சுகிதா (மேற்கு) ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதிமுகவின் தரப்பிலிருந்து இந்த மோசடியை கண்டித்தும், கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் கே.என். நேரு நேரில் வந்து, மேயர் இந்திராணி மற்றும் நான்கு திமுக மண்டலத் தலைவர்கள் மீது விசாரணை நடத்தினார். மண்டலம்-1யில் எந்தவிதத்திலும் தவறுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், அங்கு செயல்பட்ட மண்டலத் தலைவர் வாசுகி வீட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
மற்ற மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுகிதா ஆகியோரிடம், மேலும் நிலைக்குழு உறுப்பினர்களான மூவேந்திரன் (நகரமைப்பு) மற்றும் விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோரிடமும், ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டன.
இந்த பரபரப்புக்கு இடையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களும் தங்களுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், மண்டலம்-1யின் தலைவர் வாசுகியிடம் முன்பே ராஜினாமா பெறப்படவில்லை என்பதால், அவரையும் சேர்த்து பதவி விலகும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறிது குழப்பம் ஏற்பட்டது. பின்னர், வாசுகி திடீரென மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தை மேயர் இந்திராணி பெற்றுக்கொண்டார்.
இதன் பின்னணியில், 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக்குழு தலைவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளும் உத்தரவு மாநில அரசால் வழங்கப்பட்டது. அதன் பேரில், அனைவரின் ராஜினாமாவும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி வரலாற்றில், சொத்து வரி முறைகேடு தொடர்பாக மொத்த மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய வைத்திருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. தற்போது காலியாக உள்ள இந்த பதவிகளுக்கு புதிய நியமனங்கள் விரைவில் செய்யப்படுமா அல்லது சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்த நிலையே நீடிக்குமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.