டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்தே ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் நிர்வகிக்கும் மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் வகையில், மாத ஊதியத்தில் ரூ.2,000 உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

எனினும், அந்த அறிவிப்பிற்கு பின்னர் மூன்று மாதங்கள் கடந்தும், ஊதிய உயர்வு நடைமுறைக்கு வராததை ஒட்டி, டாஸ்மாக் ஊழியர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு நடைமுறையில் இல்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், தற்போது டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும்” என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்புக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை ரூ.10 அல்லது அதற்கு மேல் அதிகமாக விற்பனை செய்ததாக புகாரில் சிக்கிய 451 ஊழியர்களுக்கு, விதிமீறல் காரணமாக முழுமையான உயர்வு வழங்கப்படாது. அவர்களுக்கு ஊதியத்தில் ரூ.1,000 மட்டுமே உயர்வாக வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வு, ஏப்ரல் முதல் பின்னோக்கித் தேதியிட்டு, இரண்டு நாட்களுக்குள் அனைத்து தகுதியான ஊழியர்களுக்கும் செலுத்தப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box