பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில், அக்கட்சிக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “மதுரை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிப்பெற்றால் மோடியின் திட்டங்கள் எல்லாமே வீடு தேடி வரும். 20 தொகுதிகளில் போட்டிடும் பாஜக, எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். பாஜக வென்றால் சிலம்பு விளையாட்டு தேசிய விளையாட்டாக அறிவிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும். மாநில அரசு ஆண்டுக்கு 6 சிலிண்டரையும் குடும்பத் தலைவிக்கு ரூ.1500-ஐயும், இலவச வாஷிங்மெஷினையும் அறிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வரும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டது. கொரோனா வந்ததால் பணிகளைத் தொடர முடியவில்லை.
இப்போது ஒரு செங்கலைக் காண்பித்து, இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்றும் அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் கிண்டலடிக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை அட்டைகளை வைத்தா கட்ட முடியும். சிறிய வீடு கட்டவே ஓராண்டுக்கு மேல் ஆகும். அவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டுவது என்றால் சும்மாவா? பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டம் இது. நம்பிக்கையுடன் இருங்கள். எய்ம்ஸ் கண்டிப்பாக வரும். பாஜக வெற்றி பெற்றால்தான் மச்சானுக்கு டெண்டர், சித்தப்பாவுக்கு டெண்டர் எல்லாம் நிற்கும். எனவே, பாஜகவை வெற்றி பெற செய்யுங்கள்” என்று செந்தில் பேசினார்.
Discussion about this post