தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து சு. கல்யாணசுந்தரம் எம்.பி. நீக்கப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக தலைமைச் செயற்குழுவில் உறுப்பினராக இருந்த சு. கல்யாணசுந்தரம், 2014ஆம் ஆண்டு தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். பல வருடங்களாக கட்சியில் அனுபவம் பெற்ற தலைவராக இருக்கும் அவர், பாபநாசம் தொகுதியில் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை. இதனை அடுத்து, கடந்த முறையில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக தலைமையகம் வழங்கியது.
அதன்பின், திமுகவில் உள்ள கும்பகோணம் ஒன்றியத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அந்தப் பிரிவுகளில் மேற்கு ஒன்றியச் செயலாளராக தனது மகன் எஸ்.கே. முத்துச்செல்வனுக்கு பொறுப்பை ஒப்படைத்தார். மேலும், கடந்த முறையில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியும் மகனுக்கே பெற்றுத்தந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர்களது நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்த பின்னணியில்தான் தற்போது கல்யாணசுந்தரம் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, அவரது இடத்தில் சாக்கோட்டை க.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றத்தின் காரணம் குறித்து திமுக வட்டாரங்கள் தெரிவிக்கும்போது, “கல்யாணசுந்தரம், கும்பகோணத்தில் இயங்கி வரும் பரஸ்பர நிதி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். அந்த நிறுவனம் அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டடத்தை அகற்ற முயன்ற அதிகாரிகளை மிரட்டியதாகவும், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. அதன் பின், அங்கு பணியாற்றிய மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்த முடிவுக்குக் காரணமாக கல்யாணசுந்தரமும் அவரது மகனும் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன” என தெரிவித்தனர்.
மேலும், ஒரு அரசு விழாவில் கல்யாணசுந்தரம் நிகழ்ச்சி மேடையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. ஆர். சுதா இருந்தபோதும், “இங்கு காங்கிரஸில் ஒருவர் கூட இல்லை. உங்கள் தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததால்தான் உங்களை ஜெயிக்க வைத்தோம். உங்கள் நிதியை கும்பகோண வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதனால், எம்.பி. சுதா அதிருப்தியடைந்து, இந்த விவகாரத்தை நேரடியாக திமுக தலைமையிடம் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதேவேளை, ஒரு பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் பேசிய போது, “பட்டா கேட்ட உடனே கிடைக்க முடியாது. திருமணம் செய்தவுடன் குழந்தை பிறக்காது; அதற்கு பத்துமாதம் ஆகும். உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறுவிதம்தான்” எனக் கூறியதிலும் சர்ச்சை எழுந்தது. மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில், கேள்விகளை எழுதி கொடுக்கச் சொல்லி, அதில் மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும், அவரது மகன் எஸ்.கே.முத்துச்செல்வன் நடத்தி வரும் மினரல் வாட்டர் நிறுவனத்தில் தரம் சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், போலி ISI முத்திரை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதும் திமுக தலைமையை கடும் அதிருப்திக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
அத்துடன், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற “உடன்பிறப்பே வா” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது மகன் குறித்து கடும் புகார்களை நேரடியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும், அந்தப் புகார்களின் அடிப்படையிலேயே தற்போது மாவட்டச் செயலாளர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.