“திமுகவினரால் என் உயிருக்கு ஆபத்து” – காவல்துறையில் ஆதவ் அர்ஜுனா புகார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவினரால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி காவல்துறையில் அதிகாரப்பூர்வ புகார் மனு அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவை, அவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி, சென்னை தி.நகர் துணை ஆணையர் குத்தாலிக்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“நான் கடந்த மாதம் 10ம் தேதி, ஆழ்வார்பேட்டையில் உள்ள எனது அலுவலகத்தில் இருந்தபோது, திமுக கொடியுடன் ஆட்டோக்கள் மற்றும் கார்களில் சிலர் ஆயுதங்களுடன் வந்து என் அலுவலகத்தைச் சுற்றி ரவுண்ட் போடத் தொடங்கினர். அவர்களின் அசாதாரண நடத்தை காரணமாக, எனது உயிருக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டது.
எனவே, எனது உயிர் பாதுகாப்பிற்காகவும், அலுவலகம் மற்றும் வீட்டிற்கு உரிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தையடுத்து, திமுக கொடி கட்டிய வாகனங்கள் தனது அலுவலகத்தை தொடர்ந்து சுற்றியபோது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகவும், ஆதவ் அர்ஜுனா காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.
முன்னதாகவே, தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை, அரசியல் அடிப்படையில் விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜுனா, இப்போது திமுகவினரால் தன் உயிருக்கு நேரும் ஆபத்தைப்பற்றிய புகார் மனு அளித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் கவனிக்கத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.