அஜித் குமாரின் குடும்பத்துடன் போலீசும் திமுகவினரும் நடத்திய பேச்சுவார்த்தை: வீடியோ வெளியாகும் பரபரப்பு

0

அஜித் குமாரின் குடும்பத்துடன் போலீசும் திமுகவினரும் நடத்திய பேச்சுவார்த்தை: வீடியோ வெளியாகும் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் (வயது 29) போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், போலீசாரும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சேர்ந்து, மடப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில், அஜித் குமாரின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பாக முன்பே, அஜித் குமார் குடும்பத்தின் வழக்கறிஞராக செயல்படும் கணேஷ்குமார் கூறியிருந்தபடி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் நபர்கள் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்ற புகாருக்கு ஆதாரமாக இந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.

வீடியோவில் மேலும், அந்த மண்டபத்தின் வாசலை பூட்டிய நிலையில் உள்ளதை கண்ட அஜித் குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், கதவைத் திறக்க கோரி வலியுறுத்தி கத்தும் காட்சிகளும், கதவுகளை தட்டும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன.

5 காவலர்களுக்கான நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இதேவேளை, அஜித் குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களுக்கான நீதிமன்ற காவல் ஜூலை 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனைத் தவிர, காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா மற்றும் ஆனந்த் ஆகிய ஐவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கடந்த காலத்திலேயே 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க, திருப்புவனம் மாவட்ட குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டிருந்தார்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களின் நீதிமன்றக் காவல் காலம் முடிவடைந்த நிலையில், காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையின் பிறகு, குற்றவியல் நடுவர் ஜூலை 29 வரை அவர்களது காவலை மேலும் நீட்டித்தார்.