கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பூங்கா அமைக்க தற்காலிக தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து அரசு கைப்பற்றிய 118 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் தாக்கல் செய்யும் அறிக்கையைப் பெறும் வரை எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் செய்யக் கூடாது என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
வேளச்சேரி ஏரியின் பரப்பளவு சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் குறைந்து வருவதாகக் கூறி, “வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க”த்தின் துணைத் தலைவர் குமரதாசன் மனு ஒன்றை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் முன்வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், “ரேஸ் கிளப் பகுதியில் ஏரி உருவாக்கப்படுமானால், மழைக்கால வெள்ளத்திலிருந்து வேளச்சேரி பகுதிக்கு பாதுகாப்பு ஏற்படும். இதற்கான நிலவர அறிக்கையை மாநிலத்தின் தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும்” என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களான நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் சத்யகோபால் அமர்வு, புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதில், “கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சென்னை மாநகராட்சி நான்கு குளங்களை உருவாக்கியுள்ளது. அதே இடத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் திட்டம் இருந்தாலும், அந்த நிலம் மாநகராட்சிக்குப் பரிமாறப்படவில்லை” எனவும், இதனாலேயே தற்போதைக்கு எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தீர்ப்பாயம் தெரிவித்தது.