கருங்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்: நான்கு காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

கருங்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்: நான்கு காவலர்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு


கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு பகுதியை சேர்ந்த 80 வயதான சூசைமரியாள் என்பவர், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

தகவலின்படி, ஒரு வழக்குடன் தொடர்புடைய அவரது பேரனை கைது செய்யும் நோக்கில் நான்கு காவலர்கள் அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பேரனை போலீசார் அழைத்துச் செல்ல முற்பட்டதைக் கண்ட மூதாட்டி, “எதற்காக என் பேரனை இழுத்துச் செல்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.

அப்போது அவரது வயதைக் கூட மதிக்காமல், குறித்த நான்கு போலீசாரும் அவரை நிலத்தில் தள்ளி போட்டு, தரையில் இழுத்து, காலால் உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடல் பல இடங்களில் காயமடைந்து, முட்டுப் பகுதிகளில் இரத்தம் வடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரது மருமகள் சந்திரகலா 108 ஆம்புலன்ஸை அழைத்து, சூசைமரியாளை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, “மூதாட்டியை அக்கிரமமாக தாக்கி கொலை செய்த நான்கு காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் உடலை எங்களுக்கு ஒப்படைக்கமாட்டோம்,” என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.


Facebook Comments Box