“முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது நட்பின் அடிப்படையில்தான்” – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சமயத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
“முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நலம் குறைவாக உள்ளது என்ற செய்தி வந்ததையடுத்து, நாங்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தோம். இது ஒரு நட்பின் வெளிப்பாடாக இருந்தது. அரசியல் நோக்கம் எதுவும் இதில் இல்லை.
எனது திருமணம், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிது தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு 45 ஆண்டுகளாக நெருக்கமான நட்பு இருந்தது. அதுபோலவே, முதல்வர் ஸ்டாலினும் விஜயகாந்துடன் நட்புறவில் இருந்தவர். கடந்த காலத்தில், விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதபோது ஸ்டாலின் அவரை நலம் விசாரித்தார். அந்தப் பழக்கம், மரியாதை, அணுக்கம் இன்றும் தொடர்கிறது.
இன்றைய சந்திப்பு என்பது 100 சதவீதம் மரியாதை மற்றும் நட்புரீதியானதாகும். எங்கள் குடும்பத்தின் மீது ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் வைத்திருக்கும் அக்கறையின் பிரதிபலிப்பும், நாங்களும் அவர்களின் மீது வைத்துள்ள மரியாதையின் வெளிப்பாடும் தான் இச்சந்திப்பு.
தற்போது, தேமுதிக வளர்ச்சிக்காக நாங்கள் முழுமையான கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொண்டு, மக்கள் சந்திப்பு மற்றும் கூட்டங்களை திட்டமிட்டு உள்ளோம்.
கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க முடியாது. அதற்கான நேரம் வரும் போது, தேவையான அறிவிப்பை உங்களிடம் அளிப்போம்” எனக் கூறினார்.