சாலை வசதி இல்லாமல் வீடுகட்ட முடியாமல் தவிக்கும் நிலை – நச்சேரி பழங்குடியினரின் வேதனை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள நச்சேரி கிராமத்தில் வசித்து வரும் காட்டுநாயக்கர் பழங்குடியினர், அரசின் வீடமைப்புத் திட்டத்துக்கான அனுமதி இருந்தும், சாலை வசதியின்றி வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர் என புகார் தெரிவித்துள்ளனர்.
பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யன்கொல்லி – எருமாடு சாலையோரம் அமைந்துள்ள நச்சேரி கிராமத்தில், பழங்கால காலம் தொட்டே பழங்குடியினமான காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்துக்கு செல்லும் வழியில், முகப்புப் பகுதியில் “தனியார் சாலை” என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தனியார் தேயிலை தோட்டம் மற்றும் ஒரு ஒற்றையடிப் பாதை மட்டுமே உள்ளது. தற்போது, அந்த ஒற்றையடிப் பாதையை கடந்தவுடன் கிராமத்திற்குள் செல்ல முடியாதபடி தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது:
“நச்சேரி கிராமத்தில் வாழும் பழங்குடியின மக்கள் தலைமுறை தோறும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால், இவர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். அரசு வீடு கட்ட அனுமதி வழங்கியிருந்தாலும், கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல வழியின்றி வீடு கட்ட முடியாமல் நிற்கின்றனர்.
மேலும், மருத்துவ அவசர நிலைகளிலும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நேரங்களிலும் இந்த தடுப்புச் சுவர் காரணமாக மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இப்போது கூட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், மக்கள் காட்டுவழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.”
இதனால், ஒற்றையடிப் பாதையில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரை அகற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.