“ஒரு கிலோமீட்டர் நடந்து தண்ணீர் எடுக்கிறோம்” – எடப்பாடியிடம் கிராம பெண்கள் மனம் திறந்த சாட்சியம்!

“ஒரு கிலோமீட்டர் நடந்து தண்ணீர் எடுக்கிறோம்” – எடப்பாடியிடம் கிராம பெண்கள் மனம் திறந்த சாட்சியம்!

“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கோவில்பட்டியில் பிரச்சாரத்தை முடித்த பின், எட்டயபுரம், எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை வழியாக ஓட்டப்பிடாரம் நோக்கி புறப்பட்டார்.

அப்போது இரவு 7 மணியளவில், அவரது வாகனம் வேலாயுதபுரம் கிராமம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் உள்ள பெண்கள் குழுவொன்று தண்ணீர் பிடிக்க காத்திருந்தது. அவரை கண்ட பெண்கள் கைகளை உயர்த்தி அழைத்தனர்.

உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய எடப்பாடி பழனிசாமியிடம் பெண்கள், “ஒரு கி.மீ. தூரம் தள்ளுவண்டியில் குடங்களை வைத்து இழுத்து கொண்டு வந்து தண்ணீர் எடுக்கிறோம். குடிநீருக்காக இப்படி தவிக்கிறோம். தயவுசெய்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனம்விட்டு புகார் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கையை நேரில் கேட்ட எடப்பாடி பழனிசாமி, தள்ளுவண்டியில் உள்ள குடங்களை பார்வையிட்டு, “இவ்வளவு தூரம் நீங்க தள்ளி வரணுமா?” என்று வியப்புடன் கேட்டார். பின்னர், “அதிமுக ஆட்சி அமைந்த உடனே பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டமிட்டு இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்” என உறுதி அளித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அவர் கக்கரம்பட்டி, அகிலாண்டபுரம், ஆவரங்காடு, பாஞ்சாலங்குறிச்சி வழியாக ஓட்டப்பிடாரத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “குடிநீருக்காக என் வாகனத்தை வழிமறித்து மனுவை வழங்கிய பெண்களின் கதையால் எனது மனம் நெகிழ்ந்தது. இந்த பிரச்சினையை தீர்க்கும் வரை அதிமுக நிம்மதியாக இருக்காது” என்றார்.

Facebook Comments Box