திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக தீர்வு இல்லாத சூழலில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி ஒருவரிடம், திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

திமுகவின் முதன்மைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேருவின் சகோதரரான தொழிலதிபர் ராமஜெயம், 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி திருச்சியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது கடத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி, சிபிஐ போன்ற முக்கிய புலனாய்வு அமைப்புகள் விசாரித்தும், வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலை நீடித்துவருகிறது.

இந்த நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி சுடலைமுத்து என்பவருக்கு ராமஜெயம் கொலைவழக்கில் தொடர்பிருக்கலாம் என சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. சுடலைமுத்து, திருநெல்வேலி சிப்காட் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளார். மேலும், ராமஜெயம் கொலை நடைபெற்ற காலத்தில் திருச்சி மத்திய சிறையில் தொழிற்பயிற்சிக்காக அவர் வந்திருந்ததாக தகவல் உள்ளது. அப்போது மற்றொரு கைதியுடன், ராமஜெயம் கொலை குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த முக்கிய தகவலுக்கேற்ப, டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீஸ் குழு பாளையங்கோட்டை மத்திய சிறைக்குச் சென்று, கைதி சுடலைமுத்துவிடம் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக நேரில் விசாரணை மேற்கொண்டது.

Facebook Comments Box