ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிராக சீமான் அவதூறு கருத்துகள் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிராக, ஆதாரமின்றி அவதூறு கருத்துகளை வெளியிட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்வதை தடுக்க இடைக்காலத் தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீண்ட நாட்களாக, சீமான் மற்றும் டிஐஜி வருண்குமார் இடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இருவரும் தொடர்ச்சியாக பரஸ்பரம் எதிரான கருத்துகளைப் பொது மேடைகளில் தெரிவித்துவருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்றும், சீமான் ஆதாரமின்றி அவதூறு கருத்துகளை வெளிப்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டி, வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், எதிர்காலத்தில் அவதூறான, ஆதாரமற்ற பேச்சுகளைத் தடுக்கவும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்கும் விதமாகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி, “இது எண்ணிடப்பட வேண்டிய மனு; தற்போதைய நிலையில் எந்த இடைக்கால உத்தரவும் வழங்கக்கூடாது. இதே போன்ற அவதூறு வழக்கு மதுரை அமர்வில் நடைபெற்று வருகிறது” என கூறினார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, டிஐஜி வருண்குமார் மீது சீமான் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்துள்ளார். மேலும், மனுவிற்கு பதிலளிக்க சீமான் தரப்புக்கு நேரம் அளித்து, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Facebook Comments Box