சென்னையில் ‘சிங்கா 60’ கலை விழா: சமூக, கலாச்சார சிக்கல்களை வெளிக்கொணந்த ‘முச்சந்தி’ நாடகம்

சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலை விழாவில் இடம் பெற்ற சிங்கப்பூர் நாடகக் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம், தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகும் சமூக மற்றும் கலாச்சார சிக்கல்களை மேடையில் பிரதிபலித்தது.

அண்டை நாடான சிங்கப்பூர், தனது 60-வது தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற சிறப்புக் கலை விழாவை 10 நாள்கள் சென்னையில் நடத்தி வருகின்றன.

விழாவின் 2-ஆம் நாள் நிகழ்வாக, ராஜா அண்ணாமலைபுரம் ராஜரத்தினம் கலையரங்கத்தில், சிங்கப்பூரை சேர்ந்த அகம்பாவு தியேட்டர் லேப் குழுவின் ‘முச்சந்தி’ நாடகம் அரங்கேற்றம் பெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன், `இந்து தமிழ் திசை’ இயக்குநர் அகிலா விஜய் ஐயங்கார், உத்ரா பாம்பே ஞானம் மற்றும் தாரணி கோமல் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் உன்னி கிருஷ்ணன் உரையாற்றும்போது, “இந்தியாவும் சிங்கப்பூரும் இடையே பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பைத் தாண்டியும், பரந்த கலாச்சார, மொழி தொடர்புகள் உள்ளன. இவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிங்கா 60’ விழா நடப்பதை பாராட்டுகிறேன்” என்றார்.

‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, “‘தமிழால் இணைவோம்’ என்ற நோக்குடன் செயல்படும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பாலமாக விளங்குகிறது. ‘சிங்கா 60’ நிகழ்வுகள் நாடுகளை தாண்டி தமிழர்களை இணைக்கும் முயற்சியாகவும், கலை வழியாக மக்கள் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளன” எனக் கூறினார்.

நாடகக் கலைஞர்களை ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் லட்சுமி ஸ்ரீநாத் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேலும், இயக்குநர் விஜயா அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் இயக்குநர் இளங்கோ குமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மனதை கவரும் இசையுடன் நடைபெற்ற ‘முச்சந்தி’ நாடகம், தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் தோன்றும் சமூக மற்றும் பண்பாட்டு முரண்பாடுகள், தலைமுறை இடைவெளி, புதிய பார்வையில் வரலாற்றைப் பார்க்கும் முயற்சி போன்ற அம்சங்களை அடிப்படையாக கொண்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வாழ்வில் கல்வி முறை உண்டாக்கும் சவால்கள், நகைச்சுவை கலந்த வண்ணத்தில் வெளிப்படுத்தப்பட்டன.

‘சிங்கா 60’ விழாவின் முக்கிய பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம் மற்றும் டிபிஎஸ் வங்கி பங்கேற்றுள்ளன. துணை நன்கொடையாளர்களில் டிவிஎஸ், லார்சன் & டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயிண்ட் & HYC, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி & மீ, பம்ப்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு உள்ளிட்ட பலர் உள்ளனர்.

விழாவின் ஒரு பகுதியாக, தி.நகரில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் (ஸ்கை) ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி சிங்கப்பூர் உணவுப் பாரம்பரியத்தை கொண்டாடும் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் சீனாவின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்த உணவுத் திருவிழா ஆகஸ்ட் 10-ம் தேதி வரை தொடரும்.

மேலும், வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ‘ஸ்கிரீன் சிட்டி’ என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் இந்திய திரைப்படங்களில் சிங்கப்பூர் எவ்வாறு காண்பிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விரிவான விரிவுரை நடைபெறும்.

Facebook Comments Box