தூத்துக்குடிக்கு நாளை முதல்வர் ஸ்டாலின் வருகை: மின்சார கார் ஆலை திறக்க
தூத்துக்குடியில் நிறுவப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலை தொடக்க விழா மற்றும் சிறப்பு முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 4) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார்.
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், ஆண்டுக்கு 1.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறனுடன் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது.
இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில், 114 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் 2 நிர்வாக கட்டடங்கள், 2 கிடங்கு பகுதிகள் மற்றும் கார்களை சோதனை செய்யும் மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, முதல்கட்ட உற்பத்தி பணிகள் முடிவடைந்து, வி.எப்-6 மற்றும் வி.எப்-7 என்ற வகை மின்சார கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து தனியார் விமானத்தில் காலை 10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகை தருகிறார்.
விமான நிலையத்திலிருந்து கார் மூலம் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலைக்கு செல்லும் அவர், அங்கு நடைபெறும் விழாவில் தொழிற்சாலையை திறந்து வைத்து, கார்களை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து, தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின்றன.
மேலும், அரசு நலத்திட்டங்களின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளன. பிற்பகல் 12.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனியார் விமானத்தில் முதல்வர் மீண்டும் சென்னைக்கு புறப்படுகிறார்.
முதல்வர் வருகையையொட்டி, திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுமென தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பெ.கீதாஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.