பயணிக்கு மாரடைப்பு அறிகுறி: சிகிச்சைக்காக திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்பே விமானம் சென்னையில் தரையிறக்கம்

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டிருந்த விமானத்தில் உள்ள பயணிக்கு திடீரென மார்வலி ஏற்பட்டதையடுத்து, உடனடி சிகிச்சை தேவையை கருத்தில் கொண்டு, விமானி விமானத்தை திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்னையில் தரையிறக்கினார்.

கொல்கத்தாவில் இருந்து நேற்று அதிகாலை 5.05 மணிக்கு, 170 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ எயர்லைன்ஸ் விமானம், காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பயணத்தின்போது விமானத்தில் இருந்த ஒருவர், திடீரென மார்வலி ஏற்பட்டதாக புகாரளித்தார்.

அப்போது விமானம் நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, பயணியின் உடல் நலக் குறைவு குறித்து தெரிவித்தார். அவசர உதவிக்காக, விமானத்தை முன்னுரிமையுடன் தரையிறங்க அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் அவசர நிலை ஒட்டிய நடவடிக்கையை எடுத்து, அந்த விமானத்திற்கு முன்னதாகவே தரையிறங்க அனுமதி வழங்கினர். அதேசமயம், விமான நிலையத்தின் மருத்துவ அணியும் ஆம்புலன்ஸ் வசதியுடன் ஓடுபாதை அருகில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.

7.25 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த அந்த விமானம், 35 நிமிடங்களுக்கு முன்னதாகவே காலை 6.50 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.

விமானிக்கு பாராட்டு:

விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்திற்குள் சென்று பாதிக்கப்பட்ட பயணியை பரிசோதித்து, ஆம்புலன்ஸில் கொண்டு சென்று, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிற பயணிகள் பின்னர் விமானத்திலிருந்து இறங்கினர். விமானியின் விழிப்புணர்வு செயலுக்கு, பயணிகளும் விமான நிலையத்தினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

Facebook Comments Box