மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் – ஸ்கூபா டைவிங் மூலம் 22 மணி போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு

மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் உடல், தீவிர தேடுதலுக்குப் பிறகு ஸ்கூபா டைவிங் மூலம் மீட்கப்பட்டது.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 20), சோலார் பேனல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று, தனது பகுதியில் வசிக்கும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றார். அந்த நேரத்தில், கார்த்திக் திடீரென ஆழமான பகுதியில் மூழ்கினார். உடனே நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பலமுறை தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, கார்த்திக்கின் நண்பர்கள் மேச்சேரி காவல் நிலையம் மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நேரம் என்பதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அடுத்த நாள் காலை, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில், நங்கவள்ளி, ஓமலூர் மற்றும் மேட்டூர் அனல்மின் நிலையத்திலிருந்து வந்த 40 பேர் கொண்ட குழுவினர் மீண்டும் தேடுதலில் ஈடுபட்டனர். தேடுதலை எளிதாக்கும் வகையில் உபரிநீர் திட்டத்தின் கீழ் ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இதே நேரத்தில், தருமபுரி மாவட்டம் ஒக்கேனக்கல் மற்றும் சென்னை மெரினா பகுதிகளில் இருந்து தலா மூன்று பேர் கொண்ட இரு சிறப்பு குழுக்கள் அழைக்கப்பட்டன. இதில், ஒக்கேனக்கல் குழுவினர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ஸ்கூபா டைவிங் செய்து, ஏரியின் சுமார் 25 அடி ஆழத்தில் இருந்த இளைஞரின் உடலை மீட்டனர். உடல் பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 22 மணி நேரமாக நீடித்த தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தையொட்டி, ஆடி பெருக்கு நாளான இன்று எம்.காளிப்பட்டி ஏரியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், மேச்சேரி போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப் பற்றி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி கூறியதாவது:

“ஆழமான மற்றும் அபாயகரமான நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பது தவிர்க்கப்பட வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் இவ்வாறான இடங்களுக்கு செல்லக் கூடாது. மேலும், விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இத்தகைய நீர்நிலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

Facebook Comments Box