தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை எதிர்பார்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைப் பற்றிய செய்திக்குறிப்பில் சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் குமரி கடலின் அருகிலுள்ள பகுதிகளின் மேல் மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் விளைவாக நாளை முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில், ஆகஸ்ட் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் சில இடங்களில், ஆக.9-ம் தேதி ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
ஆக.5 ஆம் தேதி, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
ஆக.6 ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.7 ஆம் தேதி கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல்பகுதிகளில் நாளை முதல் ஆக.6-ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில், இடையிடையே 60 கிமீ வேகத்துடன் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பகுதிகளில் மீனவர்கள் கடலில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவைப் பொருத்தவரை, புதுக்கோட்டையில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 12 செமீ, குடிமியான்மலை, காரையூர் மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 11 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், பெருங்களூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பெய்ததாக பதிவாகியுள்ளது” என தகவல் கூறப்பட்டுள்ளது.