‘நல்லா வரணும்… வெற்றி பெறணும்…’ – விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ரங்கசாமி!
தனக்கு பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு, “வெற்றி பெறணும்” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், நடிகர் விஜய்க்கும் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டின்போது, முதலமைச்சர் ரங்கசாமி தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார். அதோடு, அந்த மாநாட்டை தொலைக்காட்சியில் பார்த்தும் இருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும், நடிகர் விஜய்யுடன் அவர் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (ஆக. 4) புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தப் பட்டியலில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயும் சேர்கிறார். அவர், இன்று மதியம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அந்த நேரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, “வணக்கம்பா, வாழ்த்துக்கள். நல்லாயிருக்கணும், வளமா இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க. வெற்றி பெறணும். நல்லது செய்துட்டு வாங்க” எனப் பதிவாக விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.