டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டாஸ்மாக் ஊழியர்கள் நாளை (ஆகஸ்ட் 5) சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
“தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்ட ரூ.2,000 ஊதிய உயர்வை அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும். இத்துடன், டாஸ்மாக் நிறுவனத்தின் 218-வது நிர்வாகக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்து, ரூ.2,000 சம்பள உயர்வாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
விசாரணை இல்லாமல் தன்னிச்சையாக தொழிலாளர்களை குற்றவாளியாகக் கூறி இடமாற்றம், தற்காலிக பணிநீக்கம், அபராதம் போன்ற ஒரு தவறுக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். அதேசமயம், மின்னணு இயந்திரம் (பாஸ் மெஷின்) வழியாக விற்பனைக்கான இலக்குகளை நிர்ணயிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்” என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி, டாஸ்மாக் ஊழியர்கள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.