சீமான் மனுவுக்கு பதிலளிக்க டிஐஜி வருண்குமாருக்கு அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம்

தன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், குறித்த வழக்கை ரத்து செய்யவும், அந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெறுவதற்குத் தடை விதிக்கவும் சீமான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, சீமான் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திருச்சி டிஐஜி வருண்குமார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, வழக்கின் தொடர்ந்து விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Facebook Comments Box