விருதுநகர் அரசு அருங்காட்சியக கட்டுமானத்தில் தாமதம்: அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த அமைச்சர்
விருதுநகர் அரசு அருங்காட்சியக கட்டுமான ஒப்பந்த காலம் இன்னும் 20 நாட்களில் முடிவடைய வேண்டிய நிலையில், இதுவரை 50 சதவிகிதத்திற்கே பணிகள் முடிவடைந்துள்ளதால், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.
விருதுநகரில் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகத்திற்குப் பதிலாக, மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் அருகில் உள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6.80 கோடி செலவில் தரைதளம் மற்றும் இரண்டு மாடிகள் கொண்ட புதிய கட்டடம் அமைக்கப்படுகின்றது. இந்தக் கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி 26, 2024 அன்று துவங்கப்பட்டன. பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தத்தின் கடைசி தேதி இம்மாதம் 25ஆம் தேதி ஆகும். ஆனால், தற்போது வரை பாதி மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், இன்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் கட்டுமான நிலையை நேரில் பார்வையிட்டுப் பரிசீலனை செய்தார். அப்போது, கட்டுமானம் எப்போது முடிவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, மூன்று மாதங்களில் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பதிலளித்தனர்.
இதைக் கேட்ட அமைச்சர், “அருங்காட்சியக கட்டுமானம் முடியும் வரை முதல்வர் திறப்பு விழாவுக்காக காத்திருக்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், கட்டிடத்தின் மேல் பகுதியில் டூம் அமைக்கவும் பலமுறை வற்புறுத்த வேண்டி இருந்ததாகத் தெரிவித்தார். பணிகள் மிக மெதுவாக முன்னேறுவதாகவும், இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டார்.
“நியமிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்தலாம். அந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் தொல்லியல் பொருட்கள் சாதாரண பொருட்கள் அல்ல. அவை மதிப்புமிக்கவை. அதை உணர வேண்டும். உங்கள் மெத்தனமாக நடக்கும் செயல்முறை சரியல்ல,” என்று அதிகாரிகளை அமைச்சர் கடிந்து கொண்டார்.
மேலும், ஒப்பந்ததாரரை அழைத்து, அனைத்து கட்டுமானப் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்று அவருக்குத் தெளிவாக அறிவுறுத்தினார்.