தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் மதிப்பீடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19% என்ற அளவில் மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், அவர் கூறியுள்ளதாவது:
“இந்தியாவின் பல மாநிலங்களை மிஞ்சியும், இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (Double Digit Growth) எட்டிய ஒரே மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. திராவிடப் பொது நலக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நமது ஆட்சி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பு 2010-11 ஆம் ஆண்டில், கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றிருந்தது. இப்போது, கலைஞரின் பாதையில் செல்கின்ற திராவிட மாடல் ஆட்சி அதையே மீண்டும் நிகழ்த்தியுள்ளது.
இதுவரை நாம் 9.69% வளர்ச்சியுடன் முதலிடத்தில் இருக்கிறோம் என்று கூறியிருந்தோம். ஆனால், மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% ஆக உயர்ந்துள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நம்மால் அடைய முடியாது என சிலர் சந்தேகப்பட்டனர். ஆனால் தற்போது வளர்ச்சி வேகத்தை பார்க்கும் போது, அந்த இலக்கு நிஜமாகவே நம்மால் எட்டக்கூடியதாக உள்ளது என்பது உறுதியாகிறது.
இத்துடன், அவர் திருக்குறளின் ஒரு வாக்கியத்தையும் மேற்கோளாக கூறினார்:
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்” (குறள் 666)
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.